31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
# பிரச்சனை என் சொந்தம் #

ஆயிரமாயிரம் தடை தேறி

ஓரோர் நொடிப் பொழுதிலும்

உன்னை உதறித் தள்ளிட

முடிவற்ற போர் செய்து

முயன்று தோற்று மீண்டெழுந்து

உடன் வசிக்கிறேன் போக்கிடமற்று

உற்றார் உறவினர்

அறிந்தோர் புரிந்தோர்

மறைந்தும் மாறியும் வழி பிரிந்திட

நீ மட்டும் கூட்டு விடவில்லை

பழகிக்கொள்கிறேன் உடன் வாழ

Posted on 13-May-2016

Read More >>

# தம்பியுடையாள் #

நின் கைபிடித்து

வழி நடத்திய காலம்

இங்கு எங்கோதான்

சமீபித்திருக்கிறது

உடன் நடந்து

பாதை

பகிர்ந்துக் கொண்டதெல்லாம்

நேற்று போல்

இன்று என் கைபிடித்து

தெளிவில்லாததோர்

நாளை நோக்கி

வழி நடத்துகிறாய்

விழி விரிக்கிறேன்

ஆளை அடித்துச் செல்லும்

ஊழி காற்றில்

இறுகப் பற்றியிருக்கும்

உன் விரல்களே

என் நம்பிக்கை தூண்களாய்

Posted on 12-May-2016

Read More >>

# கைக்கெட்டா நீ #

என் சூனியத்தின் இருப்பிலும்

இருத்தலின் இல்லாமையிலும்

உடன் கூடி பிரிகிறாய்

உன் போக்கின் சுழற்சியில்

கானகத்தே காணாமல் போன

ஒளிக் கீற்றாய் மறைகிறேன்

தேடலின் வேட்கை

துளியும் இல்லை உன்னிடம்

என் நினைவுகளுடன் களித்திருக்கிறாய்

நிழல் கண்டு நிஜமென்றுக் கொண்டாயோ?

நிதர்சனம் நான்

இங்கு நின்றிருக்க

நீயோ கானல் வெளியில்...

Posted on 03-05-2016

Read More >>

# காற்றில் கரைந்த பிம்பம் #

ஒத்தையடி பாதையின் முடிவில்

கோடியில் பதுங்கியிருக்கும் ஓர் ஓட்டு வீடு

ஆண்டாண்டு கால பிரயத்தனத்தின் பலனாய்

தன் இருப்பை மறைக்க சுற்றி ஓர் காடு

பச்சையும் பழுப்பும் நடுவில் எல்லை கோடின்றி

பின்னி பிணைந்திருக்கும் ஓர் வனப்பு

உள்ளிருக்கும் மடிந்த காலத்து மனிதர்களின் உயிர்ப்பை

வீசியடிக்கும் ஓர் தாழ்வாரத்து இளங்காற்று

முன்னொரு நாள் செழித்து ஓங்கி தழைத்த

பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓர் ஆலமர விழுது

அந்தியில் யாரும் அருகில் செல்ல

தயக்கம் தரும் ஓர் பயங்கர தோற்றம்

இப்படியும் அப்படியும் பேசி எப்படியெல்லாமோ

உருமாறிப் போன ஓர் வரலாறு

கடந்து போன நேரத்திற்கும்

வரவிருக்கும் காலத்திற்கும்

நடுவில் தெளிவில்லாத ஓர் திரை பிம்பம்

Posted on 29-Apr-2016

Read More >>

# வான் சேர் நிலம் #

உச்சி மறைந்து காணும்

ஓர் மலையின்

கூர் வெளியின் முகப்பில்

ஆழ் பள்ளங்களாய்

செதுக்கி வைத்திருப்பது

நினது பெயரே!

வெயில் சூட்டினின்று

காக்கும் நிழல் பரப்பும்

கடுங்குளிரின் கொடுங்கரத்தினின்று

மீட்கும் இளவேனிலும்

சங்கமிக்குமிடம்

உன்னில் அடங்குமோ?

என் வாழ்வென்னும் புத்தகத்தில்

கிறுக்கப்பட்ட

புரியா பிழைகளிலும்

நேர்த்தியாய் வரையப்பட்ட

அழகோவியங்களிலும்

ஏதோவொரு புள்ளியில்

உன் சாயலின் பிம்பம்!

அண்ணாந்து பார்க்கும்

அகல வானில்

அண்மையில் தெரியும்

கானல் நீரில்

என்னுள் புதைந்திருக்கும்

உன் வாசனை

கலந்தே இருக்கிறது.

ஏதோவொரு தொலைவில்

நீயென்று தீர்மானித்து

தள்ளிப் போக

தொடர்ந்து துடிக்கும்

இதய துடிப்பின்

ஒரு துடிப்புக் கூட

கட்டளையிடவில்லை.

உன்னுள் மூழ்கிட

விழையும் நானும்

என்னை துறந்து

எனதருகிலேயே நிற்க

துடிக்கும் நீயும்

வான் சேர் நிலம்.

Posted on 20-Apr-2016

Read More >>

# என்னை போல் பெண்ணொருத்தி #

அம்மா ஊட்டிய உணவை நான் மறுத்தபோது

உணவுக்கு வழியின்றி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள்

பள்ளிக்கு செல்ல நான் அடம் பிடித்தபோது

பள்ளிக்கு வெளியே இரும்பு கதவில் தொங்கியபடி

ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்

கல்லூரியில் கடனுக்காக நான் படித்துக் கொண்டிருந்தபோது

கடனடைக்கவென்று வீட்டு வேலை செய்துக் கொண்டிருந்தாள்

பொழுதுபோக்கிற்காக நான் புத்தகம் வாசித்தபோது

எழுத்துக்கூட்டி தன பெயரை வாசிக்க திணறிக் கொண்டிருந்தாள்

சமுதாய அந்தஸ்திற்காக நான் வேலை பார்த்தபோது

தன் பிள்ளை படிக்க எனக்கு ஊழியம் செய்துக் கொண்டிருந்தாள்

என் பிள்ளைக்கு நான் சிற்றுண்டி கொடுத்தபோது

வீட்டில் மீதமிருந்ததை எடுத்துச் செல்ல

என்னிடம் அனுமதிக் கேட்டுக் கொண்டிருந்தாள்

என் பெயரனுக்கு நான் கதை சொல்ல

அடுக்களையில் உலை வைத்து அவள் வெந்துக் கொண்டிருந்தாள்

என்னை சுற்றிலும் இருக்கிறாள்

என்னை போல் பெண்ணொருத்தி

எங்கும் எப்போதும் எந்நிலையிலும்

Posted on 19-Apr-2016

Read More >>

# யான் #

ஏதுமற்ற புள்ளியிலிருந்து துவங்கிய யாத்திரை

விழுதுவிட்டு வேரூன்றி பிறப்பு படுக்கையில் குறுகலாய் நிரம்பி

இருட்டறையின் இருள் தாளாமல் சுவர்களை பெயர்த்து

உதிரம் பருகி அன்னம் புசித்து

ஜீவித்திருக்க பழக்கிக் கொள்கிறது

கற்றது புரியாமலும் கல்லாதது உணர்ந்தும்

தன்னை தானே காத்துக் கொள்ள அரண் செய்கிறது

உலகோடு ஒன்றியும் ஒட்டாமலுமானதொரு போக்கு

உறக்கமும் விழிப்பும் தொடர் சங்கிலியாய்

தன்னிலிருந்து ஒரு புள்ளியை விதைத்து

காற்றில் கரைந்தோடி கலைந்து காற்றாக மாறும் விந்தை

பயணிகள் மாறியபோதும் பாதைகள் திரும்பியபோதும்

யாத்திரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது

Posted on 16-Apr-2016

Read More >>

# மறுக்கப்பட்ட யாசகம் #

மன்னிப்புக் கோருகிறாய்

நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நட்பின் நினைவுகளைக் காலும்

நீ உண்டாக்கிய காயத்தின் வலி வலியது

மறக்க முடியாததால் மறுக்கிறேன்

வடுக்கள்

அடையாளச் சின்னங்கள்

படிப்பினைகள்

தவறு திரும்பத் திரும்ப செய்வதற்கல்ல

திருத்த முடிவு செய்தப்பின்

திரும்பிப் பார்ப்பது கோமாளிக் கூத்து

Posted on 15-Apr-2016

Read More >>

# யார் தவறு #

காதலுரைத்தாய்

உவம உவமானங்கள் விடுத்து

நேசத்தை நிஜமாய் கூறினாய்

மேல் பூச்சின்றி

பொய்யின்றி

புனைவின்றி

தடுமாற்றமின்றி

உறவுகள் மாறுவது உலகிற்கு புதிதல்ல

நம்மிடையிலான பழையதொரு உறவுக் கூட

மாறிப் போகுமென்று நினைத்ததில்லை

என்னுள் சலன சாயல்கள்

தடுமாற்றம் தவிப்பாய் மாறிய தருணம்

மீண்டும் அதே கண் கொண்டு

உனைக் காண இயலாதோ?

நதியொன்றைக் கடந்து

அக்கறை சென்றுவிட்டாய்

இக்கரையில் நான்

மீண்டும் மாற மனமில்லையென்கிறாய்

நதி கடக்க எனக்கு துணிவில்லை

இருவருக்குமிடையில் ஏனிந்த தொலைவு?

Posted on 14-Apr-2016

Read More >>

# ஓர் உணர்வு #

ஓர் காட்சி

ஓர் சலனம்

ஓர் எண்ணம்

ஓர் தயக்கம்

ஓர் யோசனை

ஓர் தீர்மானம்

ஓர் செயல்

ஓர் விளைவு

ஓர் குற்றவுணர்வு

ஓர் மன்னிப்பு

ஓர் பாடம்

ஓர் திருத்தம்

ஓர் நிறைவு

Posted on 11-Apr-2016

Read More >>